July 21, 2024

ஆடிப்பட்டமும், தானியங்களின் அரசி மக்காசோளம் சாகுபடியும்

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாகக் கருதப்படுகிறது. சராசரி ஆண்டு மழையளவு 861 மி.மீ பெறப்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 80 சதவீதம் இடம் பெறுகின்றன. மக்காசோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. நீர்த்தேவை குறைவு என்பதாலூம் அதிக மகசூல் திறன் கொண்ட பயிர் என்பதாலும் தானியங்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது.

ஆடி மாதமும் விவசாயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் மக்காசோளம் சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம் சாகுபடி சுமார் 71 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தரமான மக்காசோள விதைகளை பயன்படுத்தினால் விவசாயிகள் அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். மக்காசோளம் விதையின் முளைப்புத்திறன் 90 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். விதைகள் நன்கு திரட்சியாகவும் பதர், பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகள் அற்று இருத்தல் அவசியம். மக்காசோளம் விதையின் குறைந்த பட்ச ஈரப்பதம் 12 சதவீதமாகவும், புறத்தூய்மை 98 சதவீதமாகவும் இருக்க வேண்டும்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதை பரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் மாவட்ட மைய நூலகம் மேல்புறம் துறைமங்கலம், பெரம்பலூர் – 621220 என்ற முகவரியில் செயல்படுகிறது. இந்நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பூச்சி தாக்குதல் போன்ற பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு பணிவிதை மாதிரிக்கு ரூ.80/- பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் இரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச்சீட்டுகளுடன், மக்காசோளம் விதைகள் 500 கிராம் அனுப்பி விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை விதைபரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலர்கள் து.தயாமதி மற்றும் ரெ.ஆஷாலதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Spread the love