October 11, 2024

பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

சேலம், ஆக.2

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி வரகூர் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வரகூர் கிராம தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பாரம்பரிய நெல் சாகுபடியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி கூறினார். இயற்கை ஆர்வலர் வெங்கடாசலம் சீரக சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் முறை குறித்து கூறினார். மேலும் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார், உதவி தோட்டக்கலை அலுவலர் ராமு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார், கிராம நிர்வாக அலுவலர் குமார் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ் நுண்ணூட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்கள் குறித்தும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் முத்துவேல் நன்றி கூறினார். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.