அரியலூர், ஜூலை 3
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சோழமாதேவி கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் தலைமையேற்று பேசுகையில் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைப்பது குறித்தும் பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து மற்றும் அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். உயிர் உரங்களை தொழுஉரத்துடன் கலந்து வைத்து நுண்ணுயிர்களைப் பெருக்கி வயலில் இடுவதன் மூலம் ரசாயன உரபயன்பாட்டினை குறைக்கலாம் எனவும் விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் செல்வகுமார் முன்னிலை வகித்து பேசுகையில் உழவன் செயலி, தக்கைபூண்டின் பயன்பாடு, முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டங்கள் மற்றும் வேளாண்துறையில் செயல்படுத்தப்பட்;டு வரும் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் கலந்து கொண்டு விவசாயிகளிடத்தில் சிறப்புரை ஆற்றி பேசுகையில், கோடை உழவு செய்தல், மண்பரிசோதனை செய்து உரமிடுதல், பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தும் போது 25 சதவீதம் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்று விரிவாக விளக்கி கூறினார். முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்று பேசுகையில் அட்மா திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் நன்றியுரை ஆற்றினார். இப்பயிற்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் உஷா மற்றும் சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.