December 21, 2024

இயற்கை விவசாயத்தின் மூலம் கூடுதல் வருமானம்

மதுரை, ஜூலை 9

மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில் மள்ளப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி விவசாயம் தொடங்கவுள்ளது. தற்போது பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை வேளாண் பயிற்றுநர் பொ.வேலுசாமி பேசுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகள், குதிரைவாலி பயிர்களை இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது பஞ்சகாவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல் மற்றும் திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி இயற்கை முறையில் அதிக மகசூல் பெற்றிடலாம். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம் எனவும் விரிவாக எடுத்துக்கூறினார்.

இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.இராமசாமி பேசுகையில் மத்திய மாநில திட்டங்கள் பற்றியும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகள் முன்வரவேண்டும் காரிப் பருவத்தில் பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு மஞ்சல் வண்ணஅட்டை ,விளக்குபொறி, இனகவர்ச்சிபொறி போன்றவைகள் பயன்படுத்துவதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவும், உழவன்செயலி பதிவிறக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எடுத்த கூறினார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன் பேசுகையில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் எடுக்கும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. கலைஞரின் ஓருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மானியங்கள் பற்றியும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் ஓருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மைக்குறித்து விளக்கினார்.
அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ச.கணேசராஜா பயிர்களுக்கு தேவையான பதினாறு வகை சத்துக்கள் குறித்தும் பஞ்சகாவ்யம், பயன்படுத்தும் முறைகள் பற்றியும் அட்மா திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சத்தியா பிரித்திவிராஜன் செய்து இருந்தனர். வேளாண்மை உதவி அலுவலர் முத்தையா நன்றி கூறினார்.