December 21, 2024

ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு ஆயிரம் ஏக்கரில் துவரை சாகுபடி மானியத்திட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 26

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அ.புவனேஸ்வரி, ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு கூறியதாவது :

2024-2025 ஆம் ஆண்டில் வேளாண்மைத்துறையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்த வரப்பு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தனிப்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை, உயிர் உரங்களான ரைசோபியம் 500 மி.லி, பாஸ்போபாக்டீரியா 500 மி.லி, திரவ பொட்டாஷ் 500 மி.லி, உயிரியில் கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் 1 கிலோ மற்றும் உழவு மானியம், தெளிப்பு மானியமாக அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.2500/- மானியமாக 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.6 கிலோ விதை, உயிர் உரங்களான ரைசோபியம் 500 மி.லி, பாஸ்போபாக்டீரியா 500 மி.லி, திரவ பொட்டாஷ் 500 மி.லி, உயிரியில் கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் 1 கிலோ மற்றும் உழவு மானியம், தெளிப்பு மானியமாக அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.2500/- மானியமாக 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது ஆதார் மற்றும் சிட்டா நகலை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வேளாண் விரிவாக்க மையம், ஓசூரில் டீசுபு 5, டீசுபு 1 இரகம் தேவையான இருப்பு உள்ளது. இவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இரக துவரை சாகுபடியை அனைத்து விதமான பயிர்களின் வரப்பு ஓரங்களில் 3 அடி இடைவெளி விட்டு வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். இது 150 செ.மீ முதல் 200 செ.மீ உயரம் வரை வளரும். 4 மாதங்களில் பூ பூக்கும். 5வது மாதம் முதல் பச்சை காய்களை அறுவடை செய்யலாம்.

கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்
· உயர் விளைச்சல் இரங்களை பயன்படுத்த வேண்டும். பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த விதை 1 கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடி அல்லது 2 கிராம் கார்பென்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
· ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும்.
· ஒரு ஹெக்டருக்கு தேவையான தழைச்சத்து 12.5 கிலோ, மணிச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 12.5 கிலோ அளவு ஆகும்.
· துவரை பயிர்களில் தற்போது நுனி கிள்ளுவதன் மூலம் அதிக பக்க கிளைகள் பெருகி, அதிக காய்கள் உருவாகும்.
· பூ பூக்க தொடங்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2 கிலோ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு வொண்டரை (Pரடளநள றுழனெநச) 200 லிட்டர் நீரில் ஒட்டும் பசையுடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் பூ உதிர்தல் குறைந்து, அதிக மகசூல் கிடைக்கும் மற்றும் வறட்சியை தாங்கி வளரும்
· பயறு வகைப் பயிர்களில் சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 50 சத வேப்பங்கொட்டை கரைசல் (புதியதாக தயாரித்து) தெளிக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் 2 சத கரைசல் தெளிப்பானுக்கு தக்கவாறு தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
· பயறு வகை பயிர்களைத் தாக்கும் எலிகோவர்பா காய்புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கண்காணிக்கலாம். மேலும் ஏக்கருக்கு பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ் 400 கிராம் முதல் ஒரு கிலோ வரை தெளிப்பானுக்கு தக்கவாறு தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
· மேலும் ஊடு பயிராக காராமணி பயிர் சாகுபடி செய்யலாம். இதன் மூலம் களை கட்டுப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கிறது. காராமணி விதை வம்பன் 3 ஒசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

· திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட உரக்கலவை மற்றும் சூடோமோனாஸ் ஆகிய உரங்கள் 50 சதவீத மானியத்தில் தற்போது ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு துவரையில் சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்துகிறார்.