December 21, 2024

கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழு – காரீப் பருவ கால பயிற்சி

விருதுநகர், ஜூன் 24

விருதுநகர் வட்டாரம், அட்மா திட்டத்தின்கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழு – காரீப்பருவ கால பயிற்சியானது 2024-25ம்ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.புதூர் கிராமத்தில் 24.6.24 அன்று விருதுநகர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கே.புதூர் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர், தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான மாநில தோட்டக்கலை அபிவிருத்தித்திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டங்களின் கீழ் பழக்கன்றுகள், வீரிய ஒட்டு காய்கறி விதைகள், குழிதட்டு நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார். தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர் பரமசிவம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள், பழக்கன்றுகள், பண்ணைக்கருவிகள், கைத்தெளிப்பான் மற்றும் தார்பாலின் மானிய விலையில் வழங்கப்படும் என்பதை கூறினார்.

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கலந்து கொண்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். விருதுநகர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அட்மா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பட்டறிவுப்பயணம், பயிற்சி, செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி மற்றும் வேளாண்மைத்துறை தொடர்பான தகவல்களை வழங்கும் வலைதளங்கள், உழவன் செயலி, விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் ஊட்டச்சத்து நிலையினை தமிழ் மண்வளம் வலைதளம் மூலம் அறிந்து கொள்தல் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். முன்னோடி விவசாயி லிங்கசாமி, கோடை உழவு செய்தல், மண் மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி செய்தல் மற்றும் உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் செய்திருந்தார்.