October 11, 2024

சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி

அரியலூர், ஆக,5

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில், ஆங்கியனூர் மற்றும் கொரத்தாக்குடி கிராமங்களில் சிறுதானிய சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் சிறு தானியங்களில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய பயிர்களில் சாகுபடி முறைகளான விதை ரக தேர்வு, விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, உர மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், வறட்சி மேலாண்மைகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதன் பயன்கள்

குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பண்ணைய சாகுபடி முறையில் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு முதலிய பல்வேறு முறைகளை ஒருங்கிணைந்து பின்பற்றுவதன் மூலம் கூடுதல் லாபம் அடைய இயலும் என்பதையும் விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சிவரஞ்சனி, வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு இடுபொருட்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியில் அட்மா திட்ட பணியாளர்கள் கலைமதி, சுந்தரமூர்த்தி, வாசுகி ஆகியோர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து நடத்தினர்.