December 22, 2024

தலைவாசல் வட்டாரத்தில் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

சேலம், ஆக.7

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தியாகனூர் கிராம விவசாயிகளுக்கு அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வட்டாரத் தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று பேசினார். மண் மாதிரி எடுத்தலின் அவசியம், உயிர் உரங்களை உபயோகிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
இயற்கை விவசாயி மற்றும் உழவர் உற்பத்தி குழு தலைவர் ராஜேந்திரன் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஐந்திலை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி மற்றும் மண்வள மேலாண்மை, இயற்கை சாகுபடி தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு தனது அனுபவத்தை எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கார்த்தி வேளாண்மைதுறை மூலம் செயல்படுத்தப்படும்
திட்டங்கள் பற்றி கூறினார். பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சத்யமூர்த்தி பட்டு வளர்ப்பு சாகுபடி தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி வேளாண் வணிகத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் முத்துவேல் ஆத்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவன் செயலி பயன்படுத்தும் முறை பற்றி கூறியதுடன் பயிற்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.