October 31, 2024

பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி

மதுரை, ஜூலை 11

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் 2024-25ம் ஆண்டு நிதியின் கீழ் கவுண்டன்பட்டி கிராமத்தில் பயறுவகைப் பயிர்களில் சான்று விதையின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 10.7.24 அன்று மா.விமலா ஒருங்கிணைப்பாளர் / வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ம.ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் குணசேகரன், பயறுவகை பயிர்களில் சான்று விதையின் முக்கியத்துவம், உயிர் பூஞ்சாணக்கொல்லி டிரைக்கோடெர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்தல், 2% டி.ஏ.பி கரைசல் தெளித்து பயறுவகை பயிர்களில் அதிக மகசூல் பெற்றிடலாம். பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் காய்துளைப்பான் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்சிப்பொறி ஏக்கருக்கு 4 எண்கள் வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம் அல்லது பறவை தாங்கி ஏக்கருக்கு 20 எண்கள் வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் சு.சரவணக்குமார், கலைஞரின் திட்டம் குறித்தும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், பலன்தரும் பருத்தி சாகுபடி திட்டம் மற்றும் வேளாண்மைத் துறையின் மானிய திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

பயிர் இரகங்கள் தேர்வு மற்றும் விதை நேர்த்தி செய்வதன் அவசியம், பயறுவகைப் பயிர்களில் உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ச.கண்ணன், தொழில்நுட்ப உரை வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் மானியத் திட்டங்கள் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் து.கண்ணன் கூறினார்.

தே.கல்லுப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.விமலா, கலைஞர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இடுபொருட்களை விவசாயிகள் வாங்கி பயன் பெறுமாறும், நுண்ணூட்ட உரக்கலவையின் பயன்கள் மற்றும் உபயோகம் மற்றும் பயிர்க் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பா.மாரிமுத்து, விதை நேர்த்தி செய்வது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் கா.ஜெகன்பாண்டி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றியுரை வழங்கினார்.