October 31, 2024

பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை

விருதுநகர், ஜூலை 18

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு ஐதராபாத்தில் மேனேஜ் (ஆயயெபந) நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் க.முருகேசன் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாட்டு முறை குறித்து விவரிக்கிறார்.

இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வளர்ச்சி ஊக்கியில் முதன்மையானது பீஜாமிர்தம் கரைசலாகும். இக்கரைசலை கொண்டு விதை நேர்த்தி செய்து பின்பு விதைகளை விதைக்கலாம். இதன் மூலம் விதை மற்றும் மண்ணின் மூலம் பரவும் பூஞ்சன நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை
5 கிலோ நாட்டு பசுஞ்சாணத்தை ஒரு துணியில் மூட்டை போல் கட்டி 20 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி 12 மணி நேரம் தொங்கவிட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சுண்ணாம்பு பவுடரை கரைத்து தனியாக ஒரு இரவு வைத்திருக்க வேண்டும். நீரில் ஊறிக் கொண்டுள்ள ஐந்து கிலோ பசுஞ்சாண மூட்டையை 2 முதல் 3 முறை நன்கு அதில் உள்ள திரவம் நீரில் கலக்குமாறு பிழிந்து விட வேண்டும். அதன் பின் ஒரு கைப்பிடி அளவு தோட்டத்து மண்ணை அதில் இட்டு கலக்க வேண்டும். இக்கலவையுடன் 5 லிட்டர் நாட்டு மாடு கோமியமும் முன்பே தயாரித்து வைக்கப்பட்ட சுண்ணாம்பு கரைசலையும் சேர்க்க வேண்டும். தற்போது பீஜாமிர்த கரைசல் தயார் நிலையில் உள்ளது.

பயன்படுத்தும் முறை
1). 20 லிட்டர் பீஜாமிர்தத்தை 100 கிலோ விதையுடன் நன்கு கலந்து நிழற்பாங்கான இடத்தில் உலர விட்டு பின்பு விதைக்க வேண்டும்.
2). கிழங்கு வகைகள், தண்டு மற்றும் நாற்றுகள் நடவு செய்யும்போது ஐந்து நிமிடம் வேரினை அல்லது விதை கிழங்குகளை பீஜாமிர்தம் கரைசலில் ஊற வைத்து பின் நடவும் மேற்கொள்ள வேண்டும்.

பீஜாமிர்த்தின் நன்மைகள்

  1. வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும்.
  2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.