October 31, 2024

புதுக்கோட்டை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவங்களின் முன்னேற்ற முனைப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 13

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி மூலம் அமைக்கப்பட்ட 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய முனைப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நபார்டு வங்கி மேலாளார் தீபக்குமார் செய்திருந்தார். வேளாண்மை அலுவலர் சுபாஷினி முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர் தனது உரையில் துறையின் திட்டங்களை விரிவாக எடுத்தக்கூறினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்களை மதிப்பு கூட்டி அதிக இலாபத்திற்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கினார். மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி செயல்படவும் தங்கள் நிறுவன பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்திட முயற்சி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

நபார்டு வங்கி மேலாளர் தீபக்குமார் பேசுகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசின் மூலமாக வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் தங்களுக்கென சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கி அதன் மூலம் தங்களது வணிகத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்திட கேட்டுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் மதியழகன், தனது உரையில், உயர் விளைச்சல் பெற தரமான சான்று விதைகள் பயன்படுத்த வேண்டும் எனவும், நல்வித்தே நல்விளைச்சல், விவசாயத்தின் தொடக்கம் விதை, அவ்விதையானது விதைச்சான்றளிப்புத்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்று விதையாக இருப்பின் சான்று விதையிலிருந்து உற்பத்தி செய்யும் விளைபொருள்கள், மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக மகசூல் உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும். எனவே அனைவரும் சான்று விதைகளை பயன்படுத்துமாறும், சான்று பெற்ற விதைகள் அனைத்தும் நிர்ணயித்த முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டுள்ளதால் குறைந்தளவு விதையில் அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறினார். விதை ஆய்வாளர் பாலையன் தனது உரையில் விதை விற்பனைக்கான உரிமம் பெறுவது தொடர்பாக எடுத்தரைத்ததார்.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு) முகம்மது ரபி உரம் மற்றும் பூச்சி மருந்து உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார். மேலும் மண் பரிசோதனை முடிவுகளின்படி உரப் பரிந்துரையினை வழங்கிட அறிவுறுத்தினார். நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தடுத்திட விதை நேர்த்தி செய்திட வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை விற்பனை குழு மேலாளர் பபிதா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்றிடும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார். இறுதியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் இதுபோன்ற முகாம்கள் தங்களது கிராம அளவில் நடைபெற்றால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, சம்பா பருவம் தொடங்குவதற்கு முன் அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் தங்களது உறுப்பினர் விவசாயிகளை ஒருங்கிணைத்து முகாம் நடத்திடவும், அவ்வமயம், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கூறினார். வேளாண்மை அலுவலர் (வேவ) நிரஞ்சன் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.