November 7, 2024

பூதகுடி கிராமத்தில் காரீப் பருவ விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 22

மதுரை மாவட்டம், மேற்கு வட்டாரம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட நிதியின் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூதகுடி கிராமத்தில் பூதகுடி, கிராம வேளாண் முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கான காரீப் பருவ பயிற்சியானது 22.6.24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் மதுரை மேற்கு வட்டார வேளாண்மை அலுவலர் ம.கனிமொழி, கலைஞர் திட்டம் குறித்தும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், மானியத் திட்டங்கள் பற்றியும், காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் பெ.வரதராஜன், நெல் சாகுபடி முறைகள் மற்றும் திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் மற்றும் உபயோகம் குறித்து விளக்கி பேசினார். இப்பயிற்சிக்கு தொழில்நுட்ப உரை ஆற்றுவதற்கு ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் மகாராஜன், கலந்து கொண்டு நெல் சாகுபடி முறைகள், பயறு சாகுபடி முறைகள் மற்றும் தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். பூதகுடி கிராம அளவிலான திட்ட பொறுப்பு அலுவலர் ஆனந்தக்குமார், கலந்து கொண்டு கலைஞர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இடுபொருட்கள் விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் ராஜசேகர், பாலமுருகன் மற்றும் இ.சுஜிதா ஆகியோர் செய்திருந்தனர்.