January 2, 2025

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு விருது

மதுரை, ஜூலை 1

மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் வேளாண்மை அறிவியல் நிலையமானது வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே இந்நிலையத்தின் நோக்கமாகும்.

இந்நிலையம் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் வயல்வெளி ஆய்வுகள், முதல்நிலை செயல்விளக்கம் மூலம் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை பல்வேறு வட்டாரத்தில் முன்னெடுத்துச் செய்துள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், இயந்திரமயமாக்கல், கால்நடை உற்பத்தி மற்றும் பராமரிப்பு, இயற்கை விவசாயம், அறுவடை பின்சார் மற்றும் மதிப்பூட்டுதல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் பயனடையும் விதமாக பண்ணை ஆலோசனைகள், பயிர்களில் பல்வேறு கள ஆய்வுகள், விஞ்ஞானிகள் விவசாயிகளின் வயலுக்கு வருகை, விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வருகை, செயல்விளக்கம் கண்காட்சிகள், கண்டுணர் சுற்றுலாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கால்நடை முகாம், கிசான் கோஸ்தி போன்ற விரிவாக்கப் பணிகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததால் 2023–ம் ஆண்டிற்கான சிறந்த வேளாண்மை அறிவியல் நிலையமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டு கோவையில் நடந்த 53-வது நிறுவன நாள் விழாவில் சிறந்த வேளாண்மை அறிவியல் நிலைய விருதினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இ.சுப்ரமணியனிடம் வழங்கி சிறப்பித்தார்.