October 31, 2024

மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஜூலை 19

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கீழ் இயங்கி வரும் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி புலியடிதம்மம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் புலியடிதம்மம் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனார்.

இப்பயிற்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் (நேர்முக உதவியாளர்) சுந்தரமகாலிங்கம், வேளாண்மை துணை இயக்குநர் தலைமை ஏற்று உரையாற்றுகையில் பாரத பிரதமர் மந்திரி கௌரவ நிதி திட்டம் பற்றியும், விவசாய கடன் அட்டை திட்டத்தை பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள், அரசு மானிய விபரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், கோடை உழவு பயிர் சாகுபடி போன்ற திட்டங்களின் பயன்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் நீர் வள ஆதாரத்தை பெருக்குதல் ஆகிய திட்டங்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் இரத்தினகுமார், மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்பட்பங்கள் பற்றியும் விதைப்பதற்கு முன் விதை மேலாண்மை தொழில்நுட்பங்கள், பயிர் விலகு தூரம், பயிர் இடைவெளி மற்றும் விதை பண்ணை அமைத்தல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (ஒய்வு) அழகப்பன், கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி தொழில்பட்பங்கள் பற்றியும் அதன் மகசூல் விபரம் பற்றியும் மற்றும் கதிரி லெபாக்ஷி இரகம் மற்றும் நாட்டு இரகங்களின் குணாதிசிய முறைகள் பற்றியும் நிலம் தயாரித்தல், உளிக்கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல், பாத்தி அமைத்தல், ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை, நுண்ணூட்ட சத்துகள் குறைபாடுகள் கண்டறியும் தொழில்நுட்பங்கள் மற்றும் நிவர்த்தி செய்யும் தொழில்நுட்பங்களும், விதை நேர்த்தி, இடைவெளி, மண் அணைத்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் சரவணகுமாரி, பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழைத்தூவான் வழங்கப்பட்டு வருகிறது எனவும் வேளாண் இடுபொருட்கள் நுண்ணூட்டம் இடும்முறை பற்றி பேசினார். வேளாண்மைத் துறையின் மூலம் விநியோகிக்கப்படும், திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் இவைகளை பயன்படுத்தி பயிர்களில் விதைநேர்த்தி செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பயன்பாடுகள் குறித்தும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

காளையார்கோவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜோதி அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் பயிற்சிகள் சம்பந்தமான உள் மற்றும் வெளிமாநில, மாவட்ட அளவிலான பட்டறிவு, கண்டுணர்வு பயிற்சிகள் செயல் விளக்கத்திடல்கள் அமைத்தல் தொடர்பாக திட்டங்களைபற்றி விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக்கூறினார். உழவர் செயலி பயன்படுத்தும் முறைகள் பற்றியும் மற்றும் அதில் உள்ள 24 முகப்பு விபரம் பற்றி விரிவாக எடுத்து கூறினார். இயற்கை முறையில் விவசாயம் செய்வது மண்வளத்தை பாதுகாத்தல், இயற்கை உர கரைசலான ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரித்தல் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினார்.

மேலும் இப்பயிற்சியில் அட்மா திட்டபணியாளர் உதவி தொழில்நுட்ப மேலாளர் காளிஸ்வரி உயிர் உரமான ரைசோபியம் பயன்படுத்தி விதைநேர்த்தி செயல்விளக்கம் செய்தும், பயிற்சிக்கு உண்டான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.