October 12, 2024

வாழையில் குலைகள் பெரிதாக்க தொழில்நுட்பம்

திண்டுக்கல், ஜூலை 4

உலகின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் மிக முக்கியமான பழப்பயிர் வாழையாகும். மேலும் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மிக முக்கிய பழப்பயிராக வாழைப்பழம் விளங்குகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், ஆகிய மாநிலங்கள் வாழை உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட வாழையின் வளர்ச்சிக்குப் பெருமளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைப்படுகிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பின் வாழையின் வளர்ச்சி, குலையின் தரம், பழத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. வாழையில் குலை தள்ளிய பின் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்கும் திறன் குறைகிறது. இதனை ஈடு செய்ய வாழையில் குலை ஊட்டல் தொழில்நுட்பம் உதவுகிறது.

குலை ஊட்டலுக்குத் தேவையான பொருட்கள்
யூரியா- 7.5 கிராம்
சல்பேட் ஆஃப் பொட்டஷ் (SOP)- 7.5 கிராம்
மாட்டுச்சாணம்- 500 கிராம்
தண்ணீர்- 100 மில்லி

ஊட்டச்சத்து தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பெரிய வாளியில் யூரியா மற்றும் பொட்டாசியத்தை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாளியிலுள்ள பொருளுடனெடுத்து வைத்துள்ள மாட்டுச்சாணம் மற்றும் தண்ணீரை அதில் சேர்த்து நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊட்டச்சத்துக் கரைசல் தயார்.

பயன்படுத்தும் முறை
8 முதல் 10 விரல்கள் குலையில் தோன்றும் நிலையில் குலையின் கீழ் முனையில் கூர்மையான கத்தி கொண்டு 10-15 செ.மீ. மேலே விட்டு வெட்ட வேண்டும். தயார் செய்து வைத்துள்ள ஊட்டச்சத்துக் கரைசலை ஒரு பாலீத்தீன் கவரில் ஊற்றி பின்பு அந்தக் கவரை வாழைக்குலையின் நுனியில் சணலால் கட்டி வைத்து விடுங்கள். 15 நாட்கள் கழித்த பிறகு இந்தக் கவரை மரத்தில் இருந்து வெளியேற்றி விடுங்கள். இத்தகைய முறையினைப் பின்பற்றுவதன் மூலம் 15 நாட்கள் கழித்து 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை நீளமாக வளர்ந்து இருக்கும்.

இதனை, திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்க்கலைக்கழக நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை மாணவர்களான ம.தமிழ் முழக்கன் மற்றும் மு.ரூபன் தெரிவித்தனர்.