December 6, 2024

விதைகளை பரிசோதிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை, ஜூலை 3

தென் மேற்கு மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகள் விதைப்பிற்கு முன் விதைகளின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதைகளை பரிசோதனை செய்வதன் மூலம் இடுபொருட்கள் செலவினை குறைத்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். குறைந்த செலவில் அதிக மகசூல் பெற விதைபரிசோதனை செய்தபின் விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைகளின் முளைப்புதிறன் குறைபாடு இல்லாமல் இருப்பதையும் விதைகளில் பிற இரக விதைகள் உள்ளதா என்பதை அறிவதன் மூலம் கலப்பு விதைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மேலும் விதையின் ஈரப்பதம் மற்றும் சுத்தத்தன்மை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் பயன்படுத்தும் விதைகள் முளைக்க தரமானதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு விதைப்பரிசோதனை நிலையத்தில் விவசாய பெருமக்கள் தங்களிடம் உள்ள விதைகளை அனுப்பி அவற்றின் ஈரப்பதம், பிற இரக கலவன், முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றை பரிசோதனை செய்து அதன்பின்பு விதைப்பு செய்து அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் பெறுமாறு கேட்டுக் கொள்ளளப்படுகின்றது. விதை மாதிரிகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். விதைகளை அனுப்பும் போது பயிரின் பெயர்இ இரகம் மற்றும் குவியல் எண் ஆகியவை குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்துடன் ஒரு மாதிரிக்கு ரூ.80/- வீதம் விதைப்பரிசோதனைக் கட்டணம் சேர்த்து அனுப்புதல் வேண்டும். விதை மாதிரிகளை மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், டாங்காப் கட்டிடம், வேங்கிக்கால், திருவண்ணாமலை 606 604 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.