October 31, 2024

விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை, ஜூலை 15

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் அமைச்சகமும் மேனேஜ் நிறுவனமும் இணைந்து சமிதி மூலமாக உழவர்களின் நலன் காக்க இளைஞர் உழவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் 28 இளைஞர் உழவர்களை தேர்ந்தெடுத்து 6 நாட்கள் பயிற்சியாக கடந்த 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி முடிய வேளாண் அறிவியல் நிலையத்தில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பின் கீழ் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தின் சார்பாக வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ப.சுப்புராஜ் தலைமையில் வேளாண்மை துணை இயக்குநர் கு.சிவஅமுதன் பயிற்சினை துவக்கி வைக்கப்பட்டு மதுரை வேளாண்மைக் கல்லூரி அறிவியல் மைய தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இ.சுப்ரமணியன், விதைச்சான்று உதவி இயக்குநர், மதுரை சிங்காரலீனா கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் நெல், பயறு வகைள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், தோட்டக்கலை பயிர்களான கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை ஆகிய பயிர்களின் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதை உற்பத்தி தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம், விதை இரகத்தேர்வு, விதை அளவு விதைப்பண்ணை அமைத்தல் அதன் வயல் ஆய்வு, விதைச்சான்று நடைமுறைகள், பயிர் இடைவெளி, களை நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, வயலாய்வு காரணிகள், விதைச்சான்றளிப்பு கட்டணங்கள், விதை இரகங்கள், பயிர் எண்ணிக்கை மற்றும் இடைவெளி பராமரித்தல், பயிர் இரகங்களின் புறத்தோற்ற குணாதிசியம், கலப்பின செடிகளை அகற்றுதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகள், அறுவடை மற்றும் விதை சேமிப்பு முறைகள், விதை உலர்த்துதல், விதை ஈரப்பதம் அறிதல், விதைசுத்திகரிப்பு, விதை சேமிப்பு முறைகள், விதை சேமிப்பில் விதையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், வயல்மட்ட விதைகளை சீல் செய்தல், விதைச்சான்று அட்டை வண்ணநிலை முறைகள் அகியவை பற்றியும் அதற்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள். ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் ஊரக இளைஞர் உழவர்களுக்கு திறன் பயிற்சி தேர்வும் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர் உழவர்கள் பயிற்சியினைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர்-அட்மா திட்டம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாயிகளிடம் இருந்து கருத்துக்கேட்பு படிவும் பெற்று அதற்குரிய பயிற்சிக்கான சான்றிதழ்களை ஊரக இளைஞர் விவசாயிகளுக்கு வழங்கினார். இப்பயிற்சியில் மதுரை வேளாண்மைக்கல்லூரி அறிவியல் மைய தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இ.சுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரை வழங்கிய வல்லுநர்களுக்கும் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கும் வேளாண்மை அலுவலர் எஸ்.முத்துலட்சுமி நன்றி கூறினார். பயிற்சிக்கான நிறைவு விழா ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், சௌந்தராஜன், வசந்தி ஆகியோர் மேற்கொண்டனர்.