December 22, 2024

வேளாண்மை துறையின் சார்பாக மானாவாரி நிலக்கடலையில் இயந்திரமாக்கல் பயிற்சி

இராணிப்பேட்டை, ஜூலை 10
வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தில் மானாவாரி நிலக்கடலை பயிரில் இயந்திரமயமாக்குதல் பயிற்சி இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாரத்தில் கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை ஏற்று நிலக்கடலையில் இயந்திர மயமாக்குதலின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், விதை நேர்த்தி, கடினப்படுத்துதல் நன்மைகள், 3 முதல் 5 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கப்படுவது சாலச் சிறந்தது என்பதையும் விதைப்பது பருவமழைக்கு முந்தையதாக இருத்தல் மிக மிக அவசியம் என்பதையும் விதைகளின் ரகங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர் நித்யா, உயிர் உரங்களின் முக்கியத்துவம், விதைநேர்த்திகள் அவற்றின் பங்கு அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து முத்துக்குமார், வேளாண்மை துணை அலுவலர், வேளாண்மை திட்டங்கள் குறித்தும், முதல் அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை பற்றியும் வரப்பு பயிர்களின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவாக விளக்கினார். தொடர்ந்து செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர், கிடங்கில் உள்ள இடுபொருட்கள் அவற்றை எவ்வாறு விவசாயிகள் பெறுவது குறித்தும் விளக்கினார். தொடர்ந்து கலைவாணி, நிலத்தில் நிலக்கடலை இயந்திர முறையில் விதைத்தலை செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து சசிகலா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் உழவன் செயலி, அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கி நன்றி உரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் நர்மதா இந்த பயிற்சியினை நடத்தும் ஏற்பாடுகளை செய்தனர்.