October 31, 2024

வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் குறித்த விவசாயிகள் பயிற்சி

விருதுநகர், ஜூலை 12

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்பபயிற்சி நடைபெற்றது. இது குறித்து சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சிவகாசி வட்டாரத்தில் 2024-25ம் நிதியாண்டில் அனுப்பன்குளம் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சியானது நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ப.சுந்தரவள்ளி தலைமையேற்று வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருட்களான நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பற்றியும், அவற்றினை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்ட தொழில் மைய தொழில்நுட்ப அலுவலர் மாரீஸ்வரி கலந்து கொண்டு தானியங்கள், பயறுவகைகள் மற்றும் இதர விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம் பற்றியும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் நிதியுதவி, வங்கி மூலம் கடன் பெறும் வசதிகள் மற்றும் அதனை பெற வழிமுறைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். சிவகாசி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடாசலம், வேளாண் விற்பனைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியின் இறுதியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கதிரவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார் மற்றும் சந்தனலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.