November 21, 2024

அலங்காநல்லூர் வட்டாரத்தில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜுலை 30

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் குறித்த பயிற்சி அ.கோவில்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில் மத்திய மாநில அரசு திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், மண்புழு உரம் பயன்பாடுகள் நன்மைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றனர். அலங்காநல்லூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் மு.பாலாமணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது குறித்த தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் இராமன் பேசுகையில் கொட்டில் முறையில் குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரிப்பு முறைகள், மண்புழு உரத்தின் நன்மைகள் மண்புழு உரத்தினை கையாளுவது பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் குறித்தும் மண்புழு உரத்தில் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளதால் மண்ணின் சூழலை மேம்படுத்துதல், மண்புழு உரம் மூலம் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுதல், மண்ணில் உள்ள பொருளை எளிதில் மட்கச் செய்தல் மண்புழு உரம் மூலம் இயற்கையான முறையில் உற்பத்தி செய்தல், மண்புழு உரம் மகசூல் பெருகுதல் போன்ற ஆகியலை பற்றி விவசாயிகளின் பல்வேறு சந்தேகளுக்கு விளக்கம் அளித்து பயிற்சி வழங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் ஈஸ்வரன் பேசுகையில் காரீப் பருவத்தில் பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு பசுந்தாள் உரப்பயிர்கள், இயற்கை பூச்சி விரட்டிகளான இஞ்சி பூண்டு கரைசல், விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறி, இயற்கை திரவ உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், மண்புழு உரம் பயன்பாடுகள் ஆகியவற்றின் மூலம் மண்வளத்தை பெருக்கி அதிக மகசூல் பெறலாம் என தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் காதர் மொகைதீன் ஊட்டமேற்றிய தொழுஉரம், மீன் அமினோ கரைசல் தெளிப்பு முறைகள் குறித்த தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப உரையாற்றிய அலுவலர்களுக்கும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சௌந்தராஜன், வசந்தி செய்து இருந்தினர்.