சுவரின்றி சித்திரம் வரைய முடியாது என்பது பழமொழி. நல்ல தரமான வீரியமிக்க விதைகள் பயன்படுத்தாமல் மகசூல் பெறமுடியாது என்பது புதுமொழி. தரமான விதைகளே, விவசாயியின் அடிப்படைச் சொத்து. விவசாயத்தின் அடித்தளமே நல்ல விதைகள் தான். பல விதமான நவீன முறைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டாலும் நல்ல தரமான முளைப்புத்திறன் கொண்ட விதைகள் தான் பயிரின் விளைச்சலைப் பெரிதும் நிர்ணயிக்கின்றன.
தரமான விதையானது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விதை சான்றளிப்புத் தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, மரபுத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் விதையின் நலத்துடன் கூடிய வீரியமும் கொண்டிருக்க வேண்டும். விதையின் புறத்தூய்மை என்பது குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.
நல்விதை என்பது அதிக முளைப்புத்திறன் கொண்டாதாகும். திருவாரூர் மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்பத்திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு முடிவுகள் தபால் மூலமாகவோ, மின் அஞ்சலிலோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ வழங்கப்படுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையானது உயிரும் வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுவதாகும். முளைப்புத்திறன் பரிசோதனையில் நன்கு வாலிப்பான நாற்றுக்கள், இயல்பற்ற நாற்றுக்கள், கடின விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கண்டறியலாம்.
நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைக் குவியல்களில் இருந்து விதைக்கப்படும் விதைக் குவியல்களில் இருந்து விதைக்கப்படும் விதை மூலம் நிறைவான பயிர் எண்ணிக்கையில் வயலில் பயிர்கள் செழித்து வளரும், அதே சமயம் முளைப்புத்திறன் குறைந்த விதைகளைப் பயன்படுத்தினால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயிர்கள் வளரும், அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும். விதைச்சட்டம் 1966 பிரிவு 7 (ஆ)-ன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்காச்சோளம் – 90 சதவீதமும், நெல், கொள்ளு, எள், சனப்பு – 80 சதவீகிதம், சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு – 75 சதவிகிதம், நிலக்கடலை, சூரியகாந்தி, கத்திரி, தக்காளி, முருங்கை கீரை – 70 சதவிகிதம், நாட்டு இரக பருத்தி, வெண்டை – 65 சதவிகிதம், வீரிய ஒட்டு இரக பருத்தி – 75 சதவிகிதம், பூசணி, புடலங்காய், தடியங்காய், பாகல், மிளகாய், சுரை, தர்பூசணி – 60 சதவிகிதம் முளைப்புத்திறன் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பயிர்களுக்கு ஏதுவாக சூழ்நிலையில் விதையின் கரு முளைவிட்டு பின்னர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புத்திறனாகும். முளைப்புத்திறன் சோதனையின் போது இயல்பானது, இயல்பற்றது, கடினமானது, உயிரற்றது என்று நான்கு வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போது சாகுபடி பருவம் தொடங்க இருப்பதால் விவசாயிகள் தரமான விதைகளை உபயோகிக்கவேண்டும். விவசாய சாகுபடி பரப்பில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலம் சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகறிது. மீதமுள்ள பரப்பில் விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்த விதைகளை விநியோகம் செய்தும் பயன்படுத்தியும் வருகின்றனர். மேலும் காய்கறி பயிர்களில் தங்கள் சொந்த விதைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் தாங்களாக உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் விதைகள் நாளடைவில் வீரியம் குறைந்து மகசூலும் பாதிப்படைகிறது. எனவே தான் விதைச்சான்று துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் சான்றளிக்கப்பட்டு அரசு, அரசு சார்ந்த துறைகள் மூலம் விவசாயிகள் சான்று பெறாத தங்கள் சொந்த விதைகளையும் பயன்படுத்தலாம். எனினும் அந்த விதைகள் தரத்துடன் உள்ளனவா என அறிந்து விதைத்திட விதைப்பரிசோதனை அவசியம்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ.80/- (ரூபாய் எண்பது மட்டும்) கட்டணத்தை நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலமாகவோ மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், 15-பி, பெரியமில்தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வகை விதை மாதிரிகளை பின்வரும் விவரங்களான விதை மாதிரி அனுப்பும் விவசாயின் பெயர், தந்தை பெயர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றம் பயிரின் வகை, இரகம் மற்றும் குவியல் எண் ஆகியவற்றுடன் பின்வரும் அளவில் விதைகளை துணிப்பையில் வைத்து அனுப்ப வேண்டும். பயிர்களின் விதைகளை விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பும் போது விதைமாதிரியின் அளவு மக்காச்சோளம், நிலக்கடலை 500 கிராம், பிரெஞ்சு பீன்ஸ், அவரை – 450 கிராம், கொண்டைக்கடலை – 400 கிராம், கொள்ளு, பட்டாணி, புடலை, பூசணி, ஆமணக்கு – 250 கிராம், துவரை, உளுந்து, பீர்க்கன், சோயா, பஞ்சுநீக்கிய பருத்தி – 150 கிராம், பாசிப்பயிறு, சூரியகாந்தி, வீரிய ஒட்டு இரக பருத்தி, வெள்ளரி, சுரக்காய், கொத்தவரை, பூசணி, தர்பூசணி, வெண்டை, பரங்கி – 100 கிராம், நெல், சனப்பு, கீரை வகைகள், பீட்ரூட், முள்ளங்கி – 50 கிராம், கம்பு, ராகி, தக்கைப்பூண்டு, பாலக்கீரை, புளிச்சகீரை – 25 கிராம், கத்திரி, தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், கேரட் – 10 கிராம் என்ற அளவில் பகுப்பாய்வுக்கு அனுப்பவேண்டும்.
விதை அனுப்பிய விவசாயிகள் விவரங்கள் SPECS (ஸ்பெக்ஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விதைப்பரிசோதனையின் பகுப்பாய்வு முடிவுகள் இருப்பிட முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தங்கள் அலைபேசிக்கே அனுப்பப்படுவது சிறப்பாகும்.
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி “ஆனிபட்டத்தில் நல்ல விதையை தேர்வு செய்” என்ற புதுமொழிக்கு ஏற்ப விவசாயிகள் அனைவரும் விதைப்பரிசோதனை நிலையங்களை அணுகி விதையின் தரத்தை உறுதி செய்து நல் விதையை தேர்ந்தெடுத்து உயர்விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
More Stories
தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்
விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
கத்தரியில் சிற்றிலை நோய் தாக்குதல் மற்றும் மேலாண்மை