November 22, 2024

உரிய பதிவு சான்றுகள் இன்றி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை

சிவகங்கை, ஜூலை 3

தமிழ்நாடு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்யப்படாத உண்மைநிலை விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குநர் ம.இப்ராம்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் விதை விற்பனை உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். விற்பனை பட்டியலில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டையில்லாமலும் மூட்டைகளில் வைத்து விற்பனை செய்யப்படும் விதைகளை தனி நபரிடமோ, வியாபாரிகளிடமோ வாங்கக் கூடாது. விவசாயிகள் விதைகளை சிவகங்கை அரசு விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து முளைப்புத்திறன் பரிசோதனை செய்த பிறகு விதைக்கலாம்.

மேலும், சிவகங்கை மாவட்ட விதை விற்பனையாளர்கள் விதைக்குவியல்களை இடைவெளி விட்டு ரகம் வாரியாக பிரித்து வைக்க வேண்டும். விதை இருப்பு, விநியோக பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். விதைகள் சட்டம் 1966-இல் குறிப்பிடப்பட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். முழுமையான விவரங்களுடைய அடையாள அட்டையில் (பயிர், இரகம், குவியல் எண், நிலை, பரிசோதனை செய்யப்பட்ட நாள் (தேதி/மாதம்/ஆண்டு), காலாவதி நாள் (தேதி/மாதம்/ஆண்டு), முளைப்புத்திறன் சதவீதம் (குறைந்தபட்சம்), புறத்தூய்மை (குறைந்தபட்சம்), இனத்தூய்மை (குறைந்தபட்சம்), நிகர எடை, விதை நேர்த்தி செய்த மருந்து, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, அதிகபட்ச சில்லறை விலை, பருவம் மற்றும் பகுதி பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், வீரிய ரக உண்மைநிலை விதைகள் அனைத்தும் உரிய பதிவு சான்றுகள் மற்றும் பகுப்பாய்வு முடிவு அறிக்கையுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எக்காரணம் கொண்டும் காலாவதியான விதைகளை விற்கக்கூடாது. விதை உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை மற்றும் தரமற்ற விதைகள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் விதை விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது சிவகங்கை விதை ஆய்வாளர் அ.சகாய ஜெயக்கொடி உடனிருந்தார்.