புதுக்கோட்டை, ஜூலை 2
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் மண்வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டு வேளாண்மை துணை இயக்குநர் சங்கரலட்சுமி பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தார். இது குறித்து வேளாண்மை துணை இயக்குநர் கூறுகையில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை உழவு செய்து பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்தவுடன், பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்திடவேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனை கிரகித்து வேர்முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலைநிறுத்துகின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிமாகி மண்வளம் மேம்படுகிறது. தற்பொழுது கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கிட தக்கைப்பூண்டு விதைகள் இருப்பு வைக்கப்படவுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்திடுமாறு கேட்டுக்கொண்டார்.