October 18, 2024

சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூலை 15

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் வேளாண்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கண்ணனூர் கிராமத்தில் 15.7.24 அன்று வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ம‌ற்று‌ம் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் திலகவதி கலந்து கொண்டனர். வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள் விவரங்கள் மற்றும் மானிய திட்டங்கள், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர். மற்றும் மண் பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் ஜோஸ்பின் நிர்மலா மற்றும் உரக்கட்டுப்பட்டு ஆய்வகத்தின் வேளாண் அலுவலர் இந்துப்ரியா ஆகியோர் கலந்து கொண்டு மண்வளம் மேம்பாடு, மண் பரிசோதனை மற்றும் மண் பரிசோதனை முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். மேலும் ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு சமச்சீர் உர பயன்பாடு மற்றும் உயிரி உரங்களின் பயன்கள் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களின் பயன்பாடுகள், அதனை தயாரிக்கும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் பற்றிய கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அனைவரும் பார்வையிட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பழனி மற்றும் சிவபாண்டி ஆகியோர் செய்து இருந்தனர்.