October 18, 2024

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையும் உரம் தொடர்பான பயனீட்டாளர்களின் கூட்டம்

கோவை, ஜூன் 24

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையக்கூடிய உரங்கள் தொடர்பான பயனீட்டாளர்களுக்கான கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் வெ.கீதாலட்சுமி, இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் ப.பாலசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் து.செல்வி, தனது அறிமுக உரையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நீரில் கரையக் கூடிய உரங்கள் மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்கூடம் நிறுவியது பற்றி எடுத்துரைத்தார்.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி, இயக்குநர், முனைவர் ப.பாலசுப்பிரமணியம், சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நீரில் கரையக்கூடிய உரங்களின் உபயோகம், மற்றும் அவற்றின் உர உபயோகத்திறன் பற்றி எடுத்துரைத்தார். இதன் மூலம் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்து விவசாய பெருமக்கள் அதிக இலாபம் பெறலாம் என்று எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர், முனைவர் வெ.கீதாலட்சுமி, தனது தலைமையுரையில் தமிழக மண் வளம், தமிழக மண்ணில் ஊட்டசத்துக்களின் பற்றாக்குறை, சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் உர உற்பத்தி, மற்றும் உர நுகர்வு பயன்பாடு, நீரில் கரையக்கூடிய உரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி விளக்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையக்கூடிய உரங்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களை கோயம்புத்தூர், மதுரை மற்றும் கிள்ளிகுளம் ஆகிய இடங்களில் நிறுவுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இங்கு கூடியிருந்த பயனீட்டாளர்கள் இணைந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீரில் கரையக்கூடிய உரங்களை விவசாயிகளிடம் சென்றடைய ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீரில் கரையும் உரம் பற்றிய துண்டுப்பிரசாரங்களையும், மண்ணியல் துறைப்பற்றிய சிற்றேட்டையும் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, வெளியிட்டார்.

மண்ணியல் துறை பேராசிரியர் முனைவர் மூ.ரா.பாக்கியவதி நன்றியுரை வழங்கினார். பங்கேற்ற 50 பயனீட்டாளர்களும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கோயம்புத்தூர் வளாகத்திலுள்ள நீரில் கரையக்கூடிய உரங்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை பார்வையிட்டு பயனடைந்தனர்.