November 22, 2024

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட துத்தநாக சல்பேட் இடுவீர்

மதுரை, ஜூலை 19

மதுரை மாவட்டத்தில் நெற்பயிர் சுமார் 43,550 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சுமார் 2,200 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி பரப்பு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் தழை, சாம்பல், மணி, இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகும்.

துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்
ஒரே நிலத்தில் தொடர்ந்து நெல்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுகிறது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால், துத்தநாக சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து, மக்னீசியம் சத்து மற்றும் இரும்புச்சத்து இடுவதால் அவை துத்தநாக சத்தின் செயல்திறனைக் குறைக்கிறது.

பற்றாக்குறைக்கான அறிகுறிகள்
துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறிவிடும், இலைகள் காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிறக்கோடுகள் உருவான இலைகள் வெளுத்து காணப்படும் மற்றும் நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு மலட்டுத் தன்மையுடன் காணப்படும். இதனால் விளைச்சல் குறைவு ஏற்படும்.

நிவர்த்தி
துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து பரம்படித்த பின், நடவிற்கு முன் சீராக வயலில் தூவ வேண்டும். பின்னர் கடைசி உழவில் போட்டு மண்ணில் ஆழப் புதையும்படி செய்தால், துத்தநாக சல்பேட் எதிப்பு சக்தி ஏற்பட்டு பயிருக்கு கிடைக்காத நிலையை அடைந்துவிடும். அடி உரமாக துத்தநாக சல்பேட் இடாவிட்டால் பயிர் நட்ட 20, 30 மற்றும் 40 ஆம் நாளில் குறுகிய கால பயிருக்கு 30, 40 மற்றும் 50 ஆவது நாளில் 0.5 சதவீதம் திரவமாக இலையில் தெளிக்க வேண்டும்.

நெல் சாகுபடியில் ஜிப்சம் இடும் முறை
களி அதிகம் உள்ள சுண்ணாம்பு இல்லாத மற்றும் சிறிதளவு களர் உள்ள நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை மற்ற இரசாயன உரங்களுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும்.

ஜிப்சம் மற்றும் ஜிங்க் சல்பேட் அனைத்து வட்டாரங்களிலும் மானிய விலையில் வழங்கிட இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று பயனடைந்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் ப.சுப்புராஜ் கேட்டுக் கொண்டார்.