October 18, 2024

பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி

அரியலூர், ஜூலை 19

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அட்மா திட்டத்தில் கோடை கால பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்களில் நீர் பற்றாக்குறை குறித்த மேலாண்மை பயிற்சி விவசாயிகளுக்கு, கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் சிலால் கிராமத்தில் நடைப்பெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) செல்வகுமார் தலைமையேற்று பேசுகையில், வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டங்கள், மெட்டாரைஸியம் பயன்பாடு, சூடோமோனாஸ், டி.விரிடி பயன்பாடுகள், நுண்ணூட்டங்களின் பயன்பாடு, உயிர் உரங்களின் பயன்பாடு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியன குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து விவசாயம் செய்யுமாறு கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன், கலந்துக்கொண்டு விவசாயிகளிடத்தில் சிறப்புரை ஆற்றி பேசுகையில், நீர் வறட்சியை தவிர்க்க பயிர்களுக்கு 2 சதவிகிதம் டீஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். மேலும் வறட்சி காலத்தில் எவ்வாறு வேரின் வளர்ச்சியை தூண்டி நீராவி போக்கை தடு;ப்பது என்பது குறித்தும் கூறினார். நுண்ணூட்டத்தின் பயன்பாடு குறித்தும், மக்காச்சோளப்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, சுற்று சூழல் பாதிக்காமல், பயிர்களை தாக்கும் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்த இயற்கையுடன் இணைந்த பல முறைகளான உழவியல் முறைகள், கைவினை முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் இரசாயன முறைகள் ஒரு சேர ஒருங்கிணைத்து, பயிர்கள் அந்தந்த பருவங்களில், தேவைக்கேற்ப உரியவாறு கையாண்டு, குறைந்த செலவில் பயிரை பாதுகாத்து நிறைந்த நல்விளைச்சலை பெறகூடிய தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் என விரிவாக எடுத்துக் கூறினார். மஞ்சள் வண்ண அட்டை, இனக்கவர்ச்சி பொறி மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகள் குறித்தும் விரிவாக எடுத்து கூறி, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார். முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்று அட்மா திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து நன்றியுரையாற்றினார். இப்பயிற்சியில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் உஷா, சிலால் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.