புதுக்கோட்டை, ஆக.9
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடியில் உயிர்ம இடுபொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் கழிவுகளை மறு சுழற்சி செய்திடும் பொருட்டு மண்புழு கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வி.எம். ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டத்தின் வாயிலாக உயிர்ம வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிர் சாகுபடிக்கு பின்பு கிடைக்கப்பெறும் வேளாண் கழிவுகள் மற்றும் களைகள் ஆகியவற்றை மறு சுழற்சி செய்திடும் வகையில் கம்போஸ்ட் உரம் தயாரித்து பயிர்களுக்கு இடலாம். இதனால் மண்வளம் மேம்படுவதோடு பயிரின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்து கம்போஸ்ட் தயாரித்திட மண்புழு முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்புழு கம்போஸ்ட்
மண்புழுவை விவசாயியின் நண்பரென்று தொன்று தொட்டு கூறிவருகிறோம். மண் மற்றும் குப்பைகளை தின்று சத்து நிறைந்த கழிவு பொருள்களை வெளியேற்றுகிறது. ஒரு கிலோ மண்புழு (சுமார் 1000 புழுக்கள்) ஒரு நாளில் 5 கிலோ கழிவுப்பொருள்களை வெளியேற்றுகிறது. நமது வீட்டு குப்பை பொருட்களைக் கொண்டு மண்புழு கம்போஸ்ட் தயாரிப்பதின் மூலமாக குப்பைகள் மண்ணானது பொன் போல பயிர் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. ஒவ்வொரு மண் வகைகளிலும் தனிப்பட்ட மண்புழுக்கள் காணப்படுகிறது. எனவே உள்ளுர் மண்புழு இரகங்களை பயன்படுத்துவது நல்லது.
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை
2 மீ. யீ 1 மீ. யீ 0.75 மீ. என்ற அளவிற்கு குழிகளெடுத்து செங்கல்லினால் கட்டவேண்டும். மழைத்தண்ணீர் குழிக்குள் விழாமல் கவனித்து கொள்ள வேண்டும். குழியின் அடியில் 15 செ.மீ முதல் 20 செ.மீ கனத்தில் அழுக்குமண் (ஸிலிழிதுதீ றீலிஷ்யி) போட்டு மண்புழு படுக்கை அமைக்க வேண்டும். அதற்குமேல் 5 செ.மீ கனத்தில் உடைந்த செங்கல் துண்டுகள் மற்றும் மணல் போட வேண்டும். மண்புழு படுக்கை எப்பொழுதும் ஈரமுள்ளதாக இருத்தல் வேண்டும். பின் 100 மண்புழுக்களை குழிக்குள் விடவேண்டும். அதன்மேல் ஆங்காங்கே குறைந்த அளவில் பச்சை சாணியை போடவேண்டும். பின் 6 செ.மீ கனத்தில் காய்ந்த இலை அல்லது வைக்கோல் போடவேண்டும். பின் 30 நாட்களுக்கு குழியில் ஈரமுள்ளதாக பாதுகாத்தல் வேண்டும். குழியினை வாழை இலையினாலோ தென்னை அல்லது பனை ஒலையினாலோ பறவைகள் மண்புழுக்களை எடுக்காதவாறு மூடி வைக்கவேண்டும். 30 நாட்களுக்கு பின் பாதி மக்கிய நனைந்த இயற்கை கழிவுகளை (கால்நடைகளின் கழிவுகள் சமையலறை கழிவுகளை அல்லது உணவகத்திலிருந்து பெறப்படும் கழிவுகள்) 5 செ.மீ கனத்தில் பரப்பவேண்டும். பின் இருவாரங்களுக்குகொருமுறை தொடர்ந்து போடவேண்டும். அடிக்கடி இயற்கை கழிவுகளை மண்புழு சாகாதபடி கிளறிவிட வேண்டும். கம்போஸ்ட் குழி நிறைவதுவரை இயற்கை கழிவுகளை போடவேண்டும். பின் 30 முதல் 45 நாட்கள் வரை குழியினை ஈரமுள்ளதாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு 3 முதல் 4 நாட்கள் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலமாக மண்புழுக்கள் கீழேயுள்ள ஈரமான அடிப்பகுதிக்கு சென்றுவிடும். மண்புழு கம்போஸ்டிலிருந்து கிடைக்கும் மண்புழுவின் கழிவுகளை கம்போஸ்டாக பயன்படு த்தலாம்.
மரமொன்றிற்கு 1 – 10 கிலோ வரைக்கும் மண்புழு கம்போஸ்ட் சிபாரிசு செய்யப்படுகிறது. மேலும் ஒரு ஏக்கர் பயிர் சாகுபடிக்கு 2000 கிலோ அளவிலும் சிபாரிசு செய்யப்படுகிறது. மண்புழு கம்போஸ்ட் இட்ட நிலங்களில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். மேலும் ஈரம் சீக்கிரத்தில் காயாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மண்புழு கம்போஸ்ட் இட்ட நிலங்களில், பயிருக்கு அடியுரமாகவோ மேலுரமாகவோ இரசாயன உரங்களை மண்ணில் போடக்கூடாது, தேவையிருந்தால் இலை வழியாக சத்துக்களை தெளிக்கலாம்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
பவானி வட்டாரத்தில் வணிக முறையிலான நாட்டு இன பறவைகள் வளர்ப்பு பற்றி பயிற்சி