November 22, 2024

மண் வள மேம்பாட்டிற்க்கு பசுந்தாள் உரப்பயிர் பயிரிடுவீர்

சிவகங்கை, ஜூன் 26

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிவகங்கை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைசாமி இத்திட்டத்தில் மானியத்தில் விஜயன்குடி கிராம விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினார். மேலும் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண் வளம் காக்கும் வகையில் பசுந்தாள் உர பயிர் பயிரிட்டு அனைவரும் பயனடைய வேண்டும் என விவசாயிகளுக்கு வலியுறுத்தினார். மேலும் பசுந்தாள் உர விதைகள் தற்போது இளையான்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது என்ற தகவலை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் விவசாயிகளிடம் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதால் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர் முடிச்சுக்களில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலைநிறுத்துக்கின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கின்றது. மேலும் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது என விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் நடவுக்கு முன் பசுந்தாள் உர பயிர்கள் சாகுபடியினை மேற்கொண்டு மண்வளத்தை காப்பதுடன் சாகுபடி செலவையும் குறைத்து தரமான விளைபொருள் மற்றும் அதிக மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

பசுந்தாள் உர விதைகளை விவசாயிகள் மானியத்தில் பெறுவதற்கு இளையான்குடி உதவி வேளாண்மை அலுவலர்களை அனுகி விதைகளை பெற்றுகொள்ளலாம் .