November 21, 2024

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற சோள வகைகள்

சோளம் மக்களின் முக்கிய உணவு தானிய வகைகளில் ஒன்றாகும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாக சோளம் உள்ளது. இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து. உயிர்சத்துக்கள், தாது உப்புக்களும் மற்றும் கறைந்த அளவில் கொழுப்பும் உள்ளன. சோளப் பயிர் எல்லா மண் வகைகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மக்காச்சோளத்தைவிட வறட்சியைத் தாங்கி வளரும். சோளம் மனித உணவாகவும், முட்டைக்கோழித் தீவனமாகவும், லைசீன் மற்றும் மீத்தியோனின் 0.13 சதவீதம் இருப்பதால் பன்றிக்கு உணவாகவும் பயன்படுகிறது.

பெருகிவரும் மக்களுக்குத் தேவையான உணவு, குறைந்து வரும் நீராதாரம், நிலப்பரப்பு, தீவனத்தேவை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது சோளத்தின் தேவை பல மடங்காக உயரும்.

சோளத்தின் நன்மைகள்
இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், சோளத்தில் குளுட்டன் இல்லாததால் இன்சுலின் அளவைக் ககட்டுப்படுத்தவும் உதவுகிறது. சோளத்திலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், தயமின், பொட்டாசியம் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்pதயைத் தருகின்றன. சோளம் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய நோய் வராமல் காக்கிறது. கோதுமை ஒவ்வாமை உள்ளோருக்கு சோளம் சிறந்த உணவாகும். மற்ற தானியங்களில் உள்ளதைவிட சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. வேகமா செரிக்க நார்ச்சத்து உதவுவதால் உடல் எடை குறைகிறது. அரிசி, கோதுமையில் உள்ளதைவிட புரதம் சோளத்தில் அதிக அளவில் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். 23 அமினோ அமிலங்களில் 21 வகைகள் அனைத்து தானிய வகைகளிலும் உள்ளன. மீதமுள்ள லைசீன், டிரிப்டோபேன் சோளத்திலும் கம்பிலும் மட்டுமே உள்ளன.

தானிய இரகங்கள்
மானாவாரிக்கு ஏற்ற கே-5, செஞ்சோளமான கே-6, தானியச் சோளமான கே-8, தென்காசி வெள்ளைச் சோளமான கே-9 ஆகிய இரகங்கள் தானிய இரகங்களாகும்.

தீவன இரகங்கள்
கே-7, கே-10, கே- 11, கோ.எப்.எஸ்-5, கோ.எப்.எஸ்-29, கோ.எப்.எஸ்-31 ஆகிய இரகங்கள் தீவன இரகங்களாகும்.

வீரிய ஒட்டு இரம்
கே-12
தானியம் மற்றும் தட்டையை கருத்தில் கொண்டு இந்த இரகம் உருவாக்கப்பட்டுள்ளது. புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரில் பயிரிட ஏற்றது. 95 நாட்களில் விலைவதால் வடகிழக்கு பருவ மழையில் நன்கு வளர்ந்து எக்டேருக்கு 3 டன் தானிய மகசூலும், 11.5 டன் தட்டையும் கொடுக்கும். குருத்து ஈ, தண்டு துளைப்பானை எதிர்த்து வளரும்.

தானிய இரகம் கே-8
இது 95-100 நாட்களில் விளையும். வடகிழக்கு பருவமழை காலத்தில் விதைக்கலாம். எக்டேருக்கு சுமார் 2 டன் தானியமும் 7 டன் தட்டையும் கிடைக்கும். கதிர் நாவாய்ப்பூச்சிகளின் தாக்குதலையும் வறட்சியையும் தாங்கி வளரும்.

தீவனச்சோளம் இரகம் கே-11
இது 110-115 நாட்களில் விளையும். எக்டேருக்கு சுமார் 1.5 டன் தானியமும் 10 டன் தட்டையும் கிடைக்கும். 4. 5 சதவீதம் புரதம் உள்ளது. குருத்துப் புழு, கதிர் நாவாய்ப்பூச்சி, அடிச்சாம்பல் நோய் போன்றவற்றை எதிர்த்து வளரும்.

தானியம் மற்றும் தீவன இரகம் ஏபிகே-1
110 நாட்களில் விளையும். 2.5 டன் தானியமும், 8 டன் தட்டையும் கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். குருத்து ஈ, தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி உடையது.

தானியம் மற்றும் தீவன இரகம் கோ-32
105 -110 நாட்களில் விளையும். சுமார் 3 டன் தானியமும், 11.7 டன் தட்டையும் கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். குருத்து ஈ, தண்டு தளைப்பான், அடிச்சாம்பல் நோய் போன்றவற்றைத் தாங்கி வளரும்.

சாபடி முறை
நிலம் தயாரித்தல்
கோடையில் சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பின்னர் கொத்துக் கலப்பையால் 2-3 முறை நன்றாக உழுது புழுதியாக்க வேண்டும். எக்டேருக்கு 8-10 டன் தொழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும் எக்டேருக்கு 4.5 கிலோ வீதம் திரம் எனும் பூசாணக்கொல்லியை மண்ணில் இடலாம்.. இதனால் நோய் தாக்குதலிலிருந்து பயிரினைக் காக்கலாம்.

விதைக்கும் காலம்
வட கிழக்கு பருவமழை தொடங்கும் செப்டம்பர் நான்காம் வாரம் தொடங்கி அக்டோபர் முதல் வாரத்திற்குள் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

உர நிர்வாகம்
எக்டேருக்கு 86 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 88 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். 86 கிலோ யூரியாவை விதைத்த 30 நாளில் மேலுரமாக இட வேண்டும்.

களை நிர்வாகம்
பயிரின் தொடக்க வளர்ச்சி காலமான விதைத்த 35 நாட்கள் வரை நிலத்தில் களை இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு விதைத்ததும் அட்ரசின் 500 கிராம் களைக்கொல்லியைத் தெளிக்கலாம். பிறகு 20 நாட்கள் கழித்து களைக்கொத்தால் களைகளை நீக்க வேண்டும்.

ஊடுபயிர்
துவரை, பச்சைப்பயறு, சோயாமொச்சை, சூரியகாந்தி ஆகியவற்றை ஊடுபயிராக இடலாம். ஊடுபயிர் இடுவதாக இருந்தால் களைக்கொல்லியை இடக் கூடாது. இரண்டு வரிசை சோளப் பயிர்களுக்கிடையே இரண்டு வரிசை தீவன தட்டைப்பயிரை ஊடுபயிராக இட்டால் பசுந்தீவனம் கிடைக்கும். மண் வளம் மேம்படும். களைகள் வளர்வது தடுக்கப்படும்.

விதை நேர்த்தி
மேற்கூறிய விதைகளை விதைப்பதற்குமுன் மாவட்டந்தோறும் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையங்களில் 100 கிராம் அளவிற்கு விதை மாதிரியினை கொடுத்து ஆய்வுக்கட்டணம் ரூ.80/- செலுத்தினால் விதையினை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பப்படும். ஆய்வறிக்கையின் அடிப்படையில் தரமான விதைகளையே விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
இதனை, ம.மகாலெட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர், அ.லயோலா அன்புக்கரசி, வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், சிவகங்கை தெரிவித்தனர். மேலும விபரங்களுக்கு 99422 71485 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.