November 21, 2024

வாலாஜா வட்டாரத்தில் தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட திட்டம்

இராணிப்பேட்டை, ஆக.6

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, தெரிவித்தார்.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதி கரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ எனும் திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், இதர தரிசு நிலங்கள் மற்றும் பயிரிடுவதற்கு ஏற்ற தரிசு நிலங்களை உடைய தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர்கள், மரங்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும், நிலத்தினை சமன் செய்து உழுவதற்காகவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விவசாயிகள் தாங்களாகவோ அல்லது வாடகை இயந்திரங்கள் மூலமாகவோ தங்கள் தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்கள், மரங்கள் போன்றவற்றை நீக்கி, சமன் செய்து, உழவு மேற்கொள்ள இவ்வினத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.

மேற்கண்ட பணிகளுக்கு எக்டர் ஒன்றிற்கு 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9,600/- வரை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தனிப்பட்ட விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப சீர்செய்யப்பட்ட தரிசு நிலங்களில் பயிர்களை தேர்வு செய்து, வேளாண்மை உழவர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இதர தி ட்டங்களை ஒருங்கிணைத்து சாகுபடி மேற்கொள்ள வழிவகை செய்ய ப்படுகிறது.

அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள கடப்பேரி, தென்கடப்பந்தங்கள், வி.சி. மோட்டூர், சென்னசமுத்திரம், படியம்பாக்கம், வானாப்பாடி மற்றும் மருதம்பக்கம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நில விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற்று நிகர சாகுபடிப் பரப்பை அதிகரித்திட வேண்டும் என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.