January 7, 2025

நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சி மேலாண்மை முறைகள்

புதுக்கோட்டை, ஜூலை 1

நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதனை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினைக் கடைபிடித்து கட்டுப்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தாக்குதல் அறிகுறிகள்
சுருள்பூச்சிப் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். பின்பு வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் புகுந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும். தீவிரத் தாக்குதலுக்குண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பார்த்தால் எரிந்து காய்ந்தது போல் காணப்படும்.

சுருள்பூச்சி மேலாண்மை முறைகள்
நிலக்கடலைப் பயிரில் ஊடுபயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்துப் பயிரை 4:1 என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்துத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்கிற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கர் ஒன்றுக்கு 20,000 எனும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை வெளியிட்டுக் கட்டுப்படுத்திடலாம். செடி ஒன்றுக்கு 2 முதல் 3 புழுக்களுக்கு மேல் தென்பட்டால், அதாவது பொருளாதார சேத நிலையினைத் தாண்டும் பொழுது ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் இமாமெக்டின்பென்சொயேட் என்ற மருந்து 100 கிராம் அல்லது ஸ்பினோசாடு 45 எஸ்.சி. 80 மி.லி. என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவசாயிகள் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்குப் பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு சுருள்பூச்சியினைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற்றுப் பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.