October 18, 2024

நூற்புழு மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு!

நூற்புழுக்கள் கணுக்களற்ற உருளை வடிவ புழுக்களாகும். இவை பயிர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து அவற்றினை சேதப்படுத்தி மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்படாடத பயிர்களே இல்லை எனலாம். இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிர்நிறமடைந்து, இலைகள் மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் வெகுவாகக் குறைகிறது.

நம் மாநிலத்தில் இதுவரை 90க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரப்பயிர்களைப் பொறுத்து தேவையான அளவு விதைகளை வயலில்
விதைத்து 40-45 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு மடக்கி உழும் போது அவை மண்ணின் இயற்பியல்-வேதியியல் பண்பில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்துவதால் அவை நூற்புழுக்களின் பெருக்கத்தை குறைத்திட வழிவகை செய்கின்றது.
*பசுந்தாளுரப் பயிர்களிலிருந்து வெளிப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களின் ஊட்டத்தினை அதிகரித்திடச் செய்து, பயிர்கள் செழிப்பாக வளர்வதினால் நூற்புழுக்களின் தாக்கம் குறைந்து விடுகிறது.

பசுந்தாளுரப் பயிர்கள் நூற்புழுக்களுக்கு தீமை செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைத் தூண்டி நூற்புழுக்களின் எண்ணிக்கையை குறைத்திட வழிவகை செய்கின்றது.

மேலும், பசுந்தாளுரப் பயிர்கழிவுகள் மட்கும்போது பீனால், அங்கக அமிலம் போன்ற திரவங்களை வெளியிட்டுத் தீமை செய்யும் நூற்புழுக்களை கட்டுக்குள் வைக்கின்றது.
ஆகையால் பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடும் போது மண் வளத்தினை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது உட்பட பல
எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம் என சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஹனீஷா தெரிவித்தார்.