October 18, 2024

அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை – இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 2

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சரோஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் வரப்பாளையம் வருவாய் கிராமத்தில் உழவர்களுக்கு உர மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி நடைப்பெற்றது. இந்த விவசாயிகள் பயிற்சியில் பவானிசாகர், வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் ப.செந்தில்வழவன் கலந்து கொண்டு மண் பரிசோதனை மூலம் உரமேலாண்மை மேற்கொள்வதன் அவசியம், ஓவ்வொரு பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொண்டு அதன் அடிபடையில் உரமிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். இதன் மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைக்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியில் கலந்துக் கொண்டு பயன்பெற வலியுறுத்தினார்.

துணை வேளாண்மை அலுவலர், பிரபாகரன் மண் பரிசோதனை மூலம் உரமேலாண்மை மேற்கொள்வதன் அவசியம், ஒவ்வொரு பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொண்டு அதன் அடிப்படையில் உரமிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். அங்கக முறையில் உர மேலாண்மையை கடைப்பிடிக்கும் வழிமுறைகளை அதன் மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைக்க முடியும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். வேளாண் பொறியியல் துறை வேளாண் பொறியாளர் வெங்கடாசலம் தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், பதிவு செய்யும் முறைகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.

தோட்டக்கலைத் துறை உதவி தோட்டக்கலை அலுவலர் வேலுச்சாமி, கலந்து கொண்டு மஞ்சள், வாழை, கரும்பு பயிர்களின் கழிவுகளை கொண்டு தொழுவுரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், கால்நடை கழிவுகளை உரமாக்கும் முறைகள், பசுந்தாள் உரமுறைகள், அசோலா வளர்ப்பு, பண்ணைகுட்டைகளில் மீன் வளர்ப்பு அதன் கழிவுகளை உரமாக்கும் முறைகள், அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் அங்ககச் சான்று பெறும் முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் பாரதி ஆகியோர் மண்மாதிரிகள் எப்படி சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பிவைப்பது என்பதைப் பற்றிய செயல் விளக்கமாக வயலில் செய்து காட்டினர். விவசாயிகளுக்கு மண்மாதிரிகள் சேகரிப்பதைப் பற்றிய அச்சுப்பிரசுரங்கள் மற்றும் மண் வளத்தை பாதுகாத்தல் குறித்த துண்டு பிரசூரங்கள் வழங்கப்பட்டது. அட்மா திட்டப் பணியாளர்கள் பயிற்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.