November 25, 2024

மண் வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை

புதுக்கோட்டை, ஜூலை 4

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், எதிர் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்தவுடன் பூ பூக்கும் தருனத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்திட வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர்முடிச்சுகளில் ரைசோபியம் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் நிலை நிறுத்துகின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியின் நன்மைகள் மண்ணிற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடியது மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. மண்ணின் பௌதீக மற்றும் இரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது, பசுந்தாள் உரங்கள் இடுவதால் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது, மண்ணிற்கு காற்றோட்டம் கிடைக்கிறது,மண்ணின் நீர்ப்பிடிப்புத்திறன் மேம்படுகிறது. மண்ணின் உரப்பயன் பாட்டுத்திறன் அதிமாகிறது, களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது மேலும் மண்ணின் கார அமிலத்தன்மைகளை சீர்படுத்துகிறது. தற்பொழுது அரிமளம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கிட தக்கைப்பூண்டு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்திடுமாறு அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.