October 18, 2024

வாலாஜா வட்டார இயற்கை விவசாய குழுவிற்கு கண்டுனர் சுற்றுலா

இராணிப்பேட்டை, ஜூலை 5

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வேளாண்மை துறை சார்பில் உயிர்ம வேளாண்மை குழு விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், திலகவதி தலைமை வகித்து உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் விவரித்து நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். மேலும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள், பயன் பெறும் திட்டங்களை குறித்து விரிவாக கூறினார்.

வேளாண்மை அலுவலர் நித்யா, திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் நோக்கங்களையும் மற்றும் அதனால் விவசாயிகள் பெறும் பயன்களையும் மற்றும் பசுந்தால் உரங்கள் பயிரிடுவதும் நன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் மேகலா, பயிர் சுழற்சி முறைகளையும் பயிர் பாதுகாப்பு முறைகளையும் உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயி, சண்முகராமன், இயற்கை விவசாய முறைகளையும் அதனால் அவர் அடைந்த நன்மைகளையும் கூறினார். பிறகு, உயிர்ம முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகாவியம், அமிர்த கரைசல், மோர் கரைசல், மீன் அமினோ அமிலம், பழக்காடி போன்றவற்றை தயாரித்து உபயோகப்படுத்தும் முறைகளையும் அதன் நன்மைகளையும் விவரித்தார். மேலும் உயிர்ம முறையில் ஆடாதோடா, ஏருக்கு, ஊமத்தை, வேம்பு இலை, புங்கன் இலை, உன்னி இலை போன்ற ஆடு, மாடு உண்ணாத இலை, தழைகளை பயன்படுத்தி பூச்சி விரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றை, செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் குழு ஒருங்கிணை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.