கோவை மாவட்டம், சூலூர் வட்டாரத்தில் சித்திரை, பட்டத்தில் விதைத்த சோளம் விதைப்பண்ணைகளில் தற்போது முதிர்ச்சி பருவம் மற்றும் அறுவடை பருவம் காணப்படுகின்றது. சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் சோளம் விதைப்பண்ணையில் நேற்று ஆய்வு செய்த கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றுத் துறை உதவி இயக்குநர், பி.ஆ.மாரிமுத்து கூறியதாவது,
தற்சமயம் சித்திரை பட்டத்தில் அமைத்த சோளம் விதைப்பண்ணைகள் முதிர்ச்சி பருவம் அடைந்துள்ளது. விதைத்தரத்தினை நிர்ணயிக்கும் கலவன் கணக்கீடு, விதை வழி பரவும் நோய்களான கரிப்பூட்டை , சோரி கெர்னல் ஸ்மட் போன்றவற்றின் கணக்கீடு இப்பருவத்தில் மேற்கொள்ளப்படும். இதனால் அடுத்த பயிர் தலைமுறையில் நோய் தாக்குதல் இன்றி இனத்தூய்மை பாதுகாக்கப்பட்டு சிறந்த தரத்திலான விதைகள் விவசாயிகளுக்கு வழங்க முடியும்.
மேலும் அறுவடையான பின் விதைக் குவியல்களில் பரிந்துரைக்கப்பட்ட நீர்தயப்பு (12ரூ) அளவுக்குள் இருப்பதையும் உறுதி செய்யப்படுகிறது. இதனால் நீண்ட நாள் விதை இருப்பு வைக்க முடியும். இறுதியாக “தமிழ்நாடு சான்று பெற்ற விதைகள்” என்று அச்சடிக்கப்பட்ட புதிய சாக்குப் பைகளில் நிரப்பி ஈய வில்லைகளிட்டு சீல் செய்யப்படுகிறது. பின்னர் விதை சுத்தி நிலையங்களில் விதை தரங்களின்படி சுத்தம் செய்து மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றட்டை பொருத்தி இறுதியாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. எதிர்வரும், ரபி பருவத்திற்கு தேவையான சோளம், உளுந்து, பாசிப்பயறு மற்றும் நிலக்கடலை விதைகள் உற்பத்தி பணி தற்சமயம் நடந்து வருகிறது என்ற தகவலையும் தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் த.ஹேமலதா மற்றும் உதவி விதை அலுவலர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை