October 18, 2024

தளி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜூலை 15

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் கலா ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துறையின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் தளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு, தேசிய உணவு எண்ணெய் இயக்கம், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை நாற்று நடவு செயல் விளக்கம் மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துவரை நாற்றுக்களை தளி கிராமத்தில் ஆய்வு செய்தார். மேலும் மாருப்பள்ளி மற்றும் ஜவளகிரி கிராமத்தில் துவரை நாற்று நடவு பணியினை துவக்கி வைத்து சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் நோக்கத்தில் துவரை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் விவசாயிகளை சாகுபடிக்கு ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருட்கள் மானியம் மற்றும் பின்னேற்பு மானியம் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தண்டரை கிராமத்தில் துவரை தனி பயிராக சாகுபடி செய்து அமைக்கப்பட்டு இருந்த செயல் விளக்க திடல்களை ஆய்வு செய்தார். தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தின் கீழ் நிலக்கடலை பயிரில் பெருவிளக்க பண்ணை திப்பனகாரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த திடலை ஆய்வு செய்து விவசாயிக்கு களை நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்களை விளக்கம் அளித்தார். பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தளி வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட ராகி துவரை மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கலகோபசந்திரம் மற்றும் சின்ன தோகரை ஆகிய கிராமங்களில் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான வழிமுறைகளையும் எடுத்துக் கூறி விளக்கம் அளிக்கப்பட்டது.

தளி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை துணை இயக்குனர் ஆய்வின்போது தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மாவட்ட திட்ட ஆலோசகர் பரசுராமன், தளி வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இம்முகாமிற்கு தேவையான முன்னேற்பாடுகளை தளி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.