December 3, 2024

நாமக்கல் மாவட்டத்தில் பயிர் நோய் மேலாண்மையில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு

நாமக்கல் மாவட்டம், வேளாண்மைத்துறையின் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கவிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, சணப்பை, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, ஆகியவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தும் போது அவை மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, கரிமச்சத்தின் அளவை அதிகரிப்பதும் நிலை நிறுத்துவதும் மிக அவசியம். களைகளை குறைக்கவும், மண்ணிலும் பயிர்களிலும் நோய்களை தோற்றுவிக்கும் நோய் வித்துக்கள் முளைப்பதைக் குறைப்பதிலும், முளைக்கப்பட்ட நோய்க்காரணிகளின் வித்துக்களை செயல் இழக்கச் செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வேர் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்களை உண்டாக்கிடும் பூஞ்சைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

பசுந்தாளுரப்பயிர்கள் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான ட்ரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், பேசில்லஸ் போன்றவற்றை ஊக்குவித்து பயிர் நோய்களின் தாக்கத்தினை குறைத்திருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன.
மேற்கண்ட பசுந்தாள் உரப்பயிர்களை விவசாய பெருமக்கள் பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்தி மறைமுகமாக நோய்க்காரணிகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை கேட்டுக் கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.